Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

சனி, 21 ஜனவரி, 2012

வேறுபடும் உணர்வுகளும் மாறுபடும் செயல்களும்

இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் புலவர் என்.இ.இராமலிங்கம். இவர் என்னுடைய தாத்தா என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு கர்வம் அதிகமாகவே இருக்கின்றது. ஏனெனில் தமிழுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து கொண்டிருக்கிறார். பணி செய்து கொண்டிருந்த காலத்தில், தினமும் மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்புகள் நடத்தியிருக்கிறார். பணி ஒய்வு பெற்றதிலிருந்து ஆண்டுக்கு குறைந்தது ஒரு நூல் இவர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு அரசின் ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ எனும் பட்டமும், ‘இறைமையும் முறைமையும்’ எனும் நூலுக்கான முதற்பரிசும் என எண்ணற்ற விருதுகளும், பரிசுகளும் பெற்றிருக்கிறார்.

நான் சிறுவனாய் இருந்த காலத்திலிருந்தே எங்கள் வீட்டிற்கு வந்து அவர் எழுதிய புத்தகங்களை அவ்வப்போது கொடுத்து செல்வது வழக்கம். ஆனால், புத்தகங்கள் படிப்பதில் எனக்கு நாட்டம் இல்லாததால், நான் படித்ததே இல்லை. நவம்பர் மாதம் அவருடைய இல்லத்திற்கு சென்ற போது, அவர் எழுதிய இரண்டு புத்தகங்களை எனக்கு கொடுத்தார். இம்முறை அவர் கொடுத்த இரண்டு புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இரண்டையும் படித்தேன். அவற்றில் ஒன்றைப் பற்றி இங்கு பார்ப்போம். “வேறுபடும் உணர்வுகளும், மாறுபடும் செயல்களும்’.

சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம், திருக்குறள், அகனாநூறு, புறனாநூறு கம்பராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றில் இருந்து கருத்துகளை உதாரணமாக காட்டி, மனிதனின் உணர்வுகளைப் பற்றியும், உணர்வுகளுக்கு ஏற்ப எவ்வாறு செயல்கள் மாறுபடுகிறது என்பதையும் அருமையாக கூறியிருக்கிறார் ஆசிரியர். மேற்கூறிய சங்க இலக்கியங்களை முழுமையாக படிக்க வேண்டும் என்ற ஒரு ஆவலை உங்கள் மனதில் உருவாகும்.

காரைக்கால் அம்மையார், கண்ணப்பர், புனிதவதியார், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் அகிய சிவபக்தர்கள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளலாம். இதுவல்லவோ பக்தி என்று நம்மை வியக்கவைக்கும். இது தான் பக்தி,வழிபாடு இப்படி தானே இருக்க வேண்டும் என்று நம் மனதில் ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.

இந்த புத்தகத்தில் இருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு.

பொருளாகட்டும், மதிப்பாகட்டும்,
ஒழுக்கமாகட்டும்! எதுவானாலும் ஒருமுறை இழந்தால் இழந்ததுதான்!!

விட்டுக் கொடுக்கும் குணத்தால் யாரும் கெட்டுப் போவதில்லை.

பிறர் பழியைப் பொறுத்துக் கொள்வது போற்றற்குரிய பண்பு. ஆனால் அதை மறந்து விடுவது அதை விட சிறந்தது.
_____________________________________________________________________________________

தொண்டர்கள் பலர் படை சூழ நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தர், மக்கள் உள்ளத்தைத் தம் அருந்தமிழ்ப் பாடல்களால் ஈர்த்தவர்.

சிவபெருமான் எங்குள்ளான்? என்பார்க்கு, அவன் இக்கோயிலில் உள்ளான், அக்கோயிலில் உள்ளான், காசியிலோ, கயிலாயத்திலேயோ உள்ளான்! என்று கூறாமல், என் சிவபெருமான், “எங்கெல்லாம் தமிழின் பெருமை பேசப்படுகின்றதோ, எங்கெல்லாம் தமிழிசை ஒலிக்கின்றதோ, அங்கெல்லாம் எழுந்தருளி அருள் புரிவார்” என இறைவனுக்கும், தமிழுக்கும் உள்ள தொடர்ப்பைத் தாம் பாடியருளிய செந்தமிழ்ப் பாடல்கள் வழியாகத் திருஞானசம்பந்தர் உணர்த்தும் திறனை அனைவரும் போற்றுவர்.

திருஞான சம்பந்தர் பாடியுள்ள 385 பதிகங்கள், முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.
_____________________________________________________________________________________
நிறப்பெரும் படைக்கலம்
நிறத்தின் நேர்உற

மறப்பயன் விளைக்குறும்
வன்மை அன்றுஅரோ!

இறப்பினும் திருஎலாம்
இழப்ப எய்தினும்

துறப்பிலர் அறம் எனில்
சூரர் ஆவதே

(கம்ப ராமாயணம் : அயோத்தி:தைலம்:30)

விளக்கம் : மாற்றான் படையை நேருக்கு நேர் நின்று எதிர்த்துப் போராடி, பகைவனை வீழ்த்தி வெல்வதால், ஒருவர் சூரர்(வீரர்) ஆகிவிட முடியாது! தன்னுயிர் போயினும், தன் செல்வம் அனைத்தும் இழக்க நேர்ந்தாலும் அறத்தை விடாமல், ‘அறநெறி நிற்பவர் எவரோ’ அவர் தான் சூரர்(வீரர்) ஆவார்! என இராமன் சுமித்தரனுக்கு அறிவுறுத்துவதாகக் கம்பர் கூறுகிறார்.
_____________________________________________________________________________________
இறைவன் உடனாய், ஒன்றாய், வேறாய் இருப்பவன். அதாவது மூன்று நிலைகளில் இருந்து உயிர்கட்கு அருள் புரியும் இயல்பினன் என்பர். இது ஒரு வகை அனுபவ உண்மை என்று அறியத்தக்கது.

1) தாய் தன் சேய்க்குப் பாலூட்டி சீராட்டி வளர்ப்பதைப் போன்று, இறைவன் ஆன்மாக்களுடன் “உடனாய்” நின்று உதவும் இயல்பினன் ஆவான்.
2) உயிர்க்குயிராய் இருந்து, பிரிக்க இயலாதவாறு ”ஒன்றாய்” நிற்கும் இயல்பினனும் ஆவான்.
3) உயிர்களின் ”வேறாய்” நின்று, அவ்வுயிர்களை இயக்கும் இயல்பினனாகவும் திகழ்கிறான்.

சிந்தித்து உணருபவர்களுக்கே இவ்வுண்மைகள் புலப்படும்.
_____________________________________________________________________________________

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages