Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

சனி, 21 ஜனவரி, 2012

சுவாமி விவேகானந்தரின் வரலாறும் அறிவுரைகளும்


சமீபத்தில் இந்த புத்தகத்தைப் படிக்கும் பாக்யம் எனக்கு கிடைத்தது. இதை ஏற்படுத்தி தந்த கடவுளுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறும் எழுச்சி தரும் அவரது சில அறிவுரைகளும் அடங்கிய இந்நூல் அழகிய ஓவியங்களுடன் எளிய நடையில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டு விழாவை முன்னிட்டு ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் சார்பாக இந்த நூல் வெளியிடப்பட்டது. அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் சிறப்புச் சலுகை விலையில் வெளியிடப்பட்டுள்ளது(4 ரூபாய் மட்டுமே).

விவேகானந்தர் என்ற பெயர் இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்திலும் உன்னதமான இடம் பெற்ற ஒன்று ஆகும். மிகச் சிறந்த ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர் அவர். 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மகாசபையில் அவர் சொற்பொழிவாற்றினார். அதைத் தொடர்ந்து நாலரை ஆண்டுகள் அவர் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சொற்பொழிவுகளும் பிரசாரப் பணிகளும் மேற்கொண்டார். அதன்மூலம் இந்தியாவைப் பற்றி மேலைநாட்டினர் கொண்டிருந்த தாழ்வான கருத்துகளை மாற்றி ஆன்மீகம், நல்லிணக்கம் மற்றும் மிகச் சிறந்த கலாசாரப் பாராம்பரியம் கொண்ட புனித பூமி அது என்று இந்தியாவின் பெருமையை உயர்ந்ததொரு பீடத்தில் அமர்த்துவதிலும் அவர் பெரும் வெற்றி பெற்றார்.

தாயகம் திரும்பியவுடன் அவர் நாடு முழுவதும் எழுச்சிமிக்க சொற்பொழிவுகளை ஆற்றினார். இந்தியர்களின் மனதில் தாய்நாட்டின் சிறப்புமிக்க கலாச்சாரப் பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தன்னம்பிக்கையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் அவர்களிடம் மேலோங்கும்படிச் செய்தார்.

இன்றைய இளைய சமுதாயத்திற்கு உலகளாவிய ஒரு லட்சிய மனிதர் விவேகானந்தர். தமது முப்பத்து ஒன்பதரை வயதிலேயே அவர் இவ்வுலகைவிட்டு மறைந்து விட்டார் என்றாலும் அதற்குள்ளாகவே அவர் மகத்தான பல சாதனைகளை செய்து முடித்தார்.மனிதகுல நலன், மேம்பாடு மற்றும் ஆன்மீக உயர்வுக்காகத் தமது குறுகிய இளமைப் பருவத்திலேயே அவர் ஆற்றிய பங்கு மிகவும் பெரியதாகும்.

இந்த நூல் குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்காகவே எழுதப்பட்டது என்றாலும் அனைவருமே இந்நூலைப் படித்துப் பயன் பெறலாம். எல்லா மக்களும், குறிப்பாக நம் நாட்டின் இளைஞர் அனைவரும், விழிப்புணர்வு தரும் வற்றாத ஊற்றாகவும் வாழ்விற்கு நல்லதொரு வழிகாட்டியாகவும் இந்நூலை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

இந்த நூலில் இருந்து சில கருத்துகள்:

மனிதனின் நிரந்திரமான, எல்லையற்ற, மரணமற்ற ஆன்மாவை எந்த ஆயதங்களாலும் வெட்ட முடியாது. எந்தச் சூட்டினாலும் உலர்த்த முடியாது. நெருப்பினால் எரிக்க முடியாது. நீரினால் நனைக்க முடியாது. அது எல்லையற்றது, பிறப்பற்றது, இறப்பற்றது, ஆரம்பமும் முடிவும் இல்லாதது. அதன் முன்னிலையில் சுரிய சந்திரர்களும், வான மண்டலங்களும் கூட கடலின் முன் சிறு துளிகளாகத் தோன்றுகின்றன. அதன் பெருமைக்கு முன்னால் இடம்(space) என்பது சூன்யத்தில் கரைகிறது. காலம் என்பது இல்லாமல் ஒடுங்கி விடுகிறது. பெருமை மிக்க இந்த ஆன்மாவில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதிலிருந்து எல்லையற்ற ஆற்றல் வரும்.

’எல்லையற்ற வலிமை கொண்ட ஆன்மா நான்’ என்று எல்லாரும் சிந்தியுங்கள். எவ்வளவு வலிமை உங்களிடம் வெளிப்படுகிறது என்பதை அப்போது காண்பீர்கள்

'அறிவே ஆற்றல்’ என்கிறது ஒரு முதுமொழி. இல்லையா?
அறிவின் மூலமாகத்தான் ஆற்றல் வருகிறது. மனிதன் தன்னை எல்லையற்ற ஆற்றலும் வலிமையும் கொண்டவனாக அறிந்துகொள்ள வேண்டும். உண்மையில் இயல்பாகவே அவன் எல்லாம் வல்லவனாகவும் எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். அதை அவன் அறிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய ஆத்மாவை எந்த அளவிற்கு உணர்கிறானோ அந்த அளவிற்கு ஆற்றலை அவன் வெளிப்படுத்துகிறான். அவனுடைய தடைகள் நொறுங்கிவிடுகின்றன. முடிவில் அவன் சுதந்திரனாகிறான்.

என்னால் இதைச் செய்ய முடியும், இதைச் செய்ய முடியாது என்று கூறுவதும் கூட பொருளற்றவைகளே. நம்மால் எதையும் செய்ய முடியும்.

ஒவ்வொரு மனிதனும் முதலில் தன்னிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை வேதாந்தம் போதிக்கிறது. நமது ஆத்மாவின் மகிமையில் நம்பிக்கையின்மையே நாத்திகம். இது அடைய முடியாத குறிக்கோள் என்று நம்மில் பலரும் நினைக்கலாம். ஆனால் இதை ஒவ்வொரு மனிதனாலும் அடைய முடியும் என்று வேதாந்தம் வலியுறுத்துகிறது.

எப்போதும் ஆன்மாவைப் பற்றியே பேசு, கேள், சிந்தனை செய். இவ்வாறு செய்துகொண்டே வந்தால், காலப் போக்கில் உன்னுள்ளும் சிங்கம் சிலிர்த்து எழுவதைக் காண்பாய்.

உள்ளிருக்கும் ஆன்மா எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கிறது. அந்த ஒளியிலிருந்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டு, தசையாலும், எலும்பாலுமான இந்த உடம்பை நாடியவாறு, ‘நான், நான், நான்’ என்று அடித்துக் கொள்கின்றனர். இதுதான் எல்லா பலவீனங்களுக்கும் அடிப்படை.

சிந்தனை எல்லாவற்றையும் விட மிகவும் வலிமையானது. இந்த சிந்தனை உங்கள் வாழ்க்கையில் முத்திரை பதிக்கட்டும். எல்லாம் வல்ல உங்கள் ஆற்றல், உங்கள் சிறப்பு, உங்கள் மகிமை இவை பற்றிய சிந்தனையால் உங்களை நிறையுங்கள்.

உடல் என்பதை மறந்து, ஒவ்வொருவரும் தன்னை ஒரு ஆன்மாவென நினைக்க வேண்டும். மீனவன் தன்னை ஆன்மாவென நினைத்தால், சிறந்த மீனவன் ஆவான். மாணவன் தன்னை ஆன்மாவென நினைத்தால், சிறந்த மாணவன் ஆவான். ஆக மொத்தத்தில், மனிதன தன்னை ஆன்மாவென நினைத்தால், சிறந்த மனிதன் ஆவான்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages