நான் நவம்பர் மாதம் சென்னைக்கு சென்றிருந்தேன். மூன்று வார காலம் அங்கு தங்கியிருந்தேன். அங்கு இருந்து திரும்பும் போது முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளில் மிக முக்கியமானதாய் ஒன்று இருந்தது. தமிழ் நாவல்கள் நிறைய வாங்கி வர வேண்டும். நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் சில நாவல்களை எனக்கு பரிந்துரை செய்தார். அவைகளை நான் வாங்கிக் கொண்டு கிளம்பி வந்தேன்.
சிவகாமியின் சபதத்தை முதலில் படிக்க வேண்டும் என்று என் மனம் சொல்லியதால், அதன்படி செய்தேன். சின்ன சின்ன புத்தகங்கள் நிறைய படித்திருக்கிறேன். ஆனால், இவ்வளவு பெரிய புத்தகம்(1054 பக்கங்கள்) இதுவரை படித்ததில்லை. என் கவனம் சிதையாமல், முழு புத்தகத்தையும் விரைவாக படிக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு தொடங்கினேன். தினமும்(திங்கள் முதல் வெள்ளி) காலை 1 மணி நேரம், மாலை 1 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்வேன். அந்த நேரத்தில் நான் தூங்குவது வழக்கம்.
ஆனால் சிவகாமியின் சபதம் தொடங்கியதில் இருந்து அந்த நேரத்தில் நான் தூங்குவது இல்லை. நான் ஞாயிற்றுகிழமை இரவுகளில் வழக்கம் போல் சொல்லும் “அய்யோ. திங்கள் வந்து விட்டதே. ஆபிஸ் போகனுமே” என்று புலம்பாமல், “திங்கள் வந்து விட்டது. சிவகாமியின் சபதம் படிக்கலாமே” என்று ஆர்வமுடன் சொல்லினேன். எனக்கு திங்கள் கிழமை மேல் ஆர்வம் உண்டானது. அதே போல் அலுவலகத்தில் இருந்து மாலை கிளம்பும் போதும், இதை போலவே உணர்ந்தேன். இதன் காரணமாக சினிமா மீது எனக்கு இருந்த மோகம் காணாமல் போய்விட்டது. தேவையில்லாத சிந்தனைகளும் காணாமல் போய்விட்டது.
சரியாக மூன்று வாரத்தில் இந்த புத்தகத்தைப் படித்து முடித்தேன். சரி கதையை பற்றி நான் சொன்னால், நீங்கள் படிக்கும் போது உங்கள் சுவாராசியத்தை குறைத்து விடும். அதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எனது சில கருத்துகளை நான் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த புத்தகத்தின் வாயிலாக, பல்லவ வம்சத்து மகேந்திர பல்லவர் பற்றியும், அவர் சிற்பகலை,சித்திரகலை, தமிழ்மொழி மேல் வைத்திருந்த காதலை பற்றியும், அவரது மகன் மாமல்லர் பற்றியும், அவரது வீரத்தை பற்றியும், அவரின் சேனாதிபதி பரஞ்சோதியைப் பற்றியும், அப்பர் பெருமானைப் பற்றியும், பண்டைய கால மாமல்லபுரத்து சிற்பங்கள், காஞ்சிபுரம் பற்றியும் நாம் நிறைய தெரிந்து கொள்ளலாம். மேலும் வடக்கில் மன்னராக இருந்த புலிகேசியைப் பற்றியும் அங்கே பிரசித்தி பெற்ற அஜந்தா ஓவியங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த புத்தகத்தை படித்த பிறகு, சரித்தர கதையை இவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியுமா என்று ஆச்சரியம் ஏற்பட்டது. கல்கி அவர்களைப் புகழ வார்த்தையில்லை. மகேந்திர பல்லவர், மாமல்லர், சிவகாமி, நாகதந்தி பிஷு, ஆயனர், கண்ணபிரான், சத்ருகணன், குண்டோதரன் ஆகிய கதாபாத்திரங்கள் இந்த சரித்திர நாவலுக்கு மிக பெரிய பலத்தைச் சேர்க்கிறார்கள். கதை முடிந்த பிறகும், உங்கள் மனதில் சில காலம் அவர்கள் நிச்சயம் தங்கி இருப்பார்கள்.
பண்டைய தமிழகத்தின் பண்பாடு, கலை உணர்வு, வீரம், கொடை குணம் ஆகியவற்றை தெரிந்து கொண்டதில் மிகுந்த பெருமிதம் அடைகிறேன். மெய் சிலிர்க்கிறது என்றே கூற வேண்டும். மேலும் பல சரித்திர நாவல்கள் படிக்க வேண்டும் என்று பேராவலை எனக்குள் ஊட்டியது.
அடுத்த பயணம்: பொன்னியின் செல்வன் - திங்கள்கிழமை தொடக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக