Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

புதன், 18 ஜனவரி, 2012

இருட்டுக்குள் மாபெரும் தேடல்!!


ஒரே கும் இருட்டு. பார்வையை எங்கே செலுத்த வேண்டும் என்பதில் குழப்பம். அங்கு சரியாக இருக்குமோ, இங்கு சரியாக இருக்குமோ என்று யோசித்து யோசித்து தலைவலி ஆரம்பித்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டம் ஒரு பக்கம் இருக்க, நிறைய சிந்தனைகள் மனதில் வருகிறது, "அலுவலகத்தில் அடுத்த நாள் செய்ய போகும் வேலைகள், நாளைக்காவது சீக்கிரம் அலுவலகத்திற்கு போகனும்"

"அச்சோ, ஏய் தேவையற்ற சிந்தனைகளே விலகி போங்கள். என்னை கவனம் செலுத்த விடுங்கள். விலகுங்கள், விலகுங்கள்", என்று மறுபடியும் இருட்டினில் எங்கே பார்வையை செலுத்த வேண்டும் என்ற தேடல் தொடங்கியது. இது சரியாக இருக்கும். இருட்டோ இருட்டு. கும் இருட்டு. அதன் உள்ளே பயணம் செய்து போய்க் கொண்டே இருக்க வேண்டும், மனதில் பேரமைதி நிலவ வேண்டும் என்று ஒரு பக்கம் லேசாக சிந்தனையுடன், அந்த இருட்டில் மனதை செலுத்தினேன். எனக்கு அது பிடித்திருந்தது. ஆனால், வெகு நேரம் அந்த அமைதியான இருட்டில் சிந்தனையை வைக்க இயலவில்லை. காரணம்? லேசாக ஓரத்தில் இருந்த சிந்தனை தலைதூக்கி காரியத்தையே கெடுத்து விட்டது. "ஏய் மனமே!! நான் சொல்வதை நீ கேட்கவே மாட்டாயா" என்று நொந்து கொண்டேன்.

ஏதாவது சிந்தனைகள் என்னை அறியாமல் எட்டி பார்த்து, என் கவனத்தை சிதைக்கிறது. போராட்டம், மாபெரும் போராட்டம். கோபத்தில் ஒரு வித வேகத்துடன் கத்தி எடுத்துக் கொண்டு போருக்கு கூட போய் விடலாம் போல் இருக்கிறது. ஆனால், தியானம் செய்ய பழகிக் கொள்ளும் காலங்களில் இருக்கும் கஷ்டம் எல்லாவற்றையும் விட கடினமாகவே இருக்கிறது. ஏனெனில், ஒரு வித வேகத்தினாலோ, கோபத்தினாலோ அல்லது மற்ற உணர்ச்சிகளினாலோ நமக்கு தியானம் செய்வதில் பலம் கிடைப்பதில்லை. எனினும் இந்த பயணத்தை பாதியில் விட போவதில்லை. என்னுடைய தேடலுக்கு பதில் கிடைக்க நான் நீண்ட நேரம் என்னை மறந்து தியானம் செய்ய வேண்டும். இன்ப துன்ப உணர்வில் இருந்து மீண்டு வர வேண்டும். எல்லா நாளும், ஒவ்வொரு நொடியும் அமைதியுடன் பேரானந்தமாக இருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி, தியானத்தில் வெற்றி பெற வேண்டும். இறைவனை உணர வேண்டும். ஆன்மா தான் இறைவன் என்பதை உணர வேண்டும்.

இது என்னுடைய தேடல் மட்டும் இல்லை. இது உங்களுடைய தேடலாகவும் இருக்க வேண்டும். இன்ப துன்ப வேதனையில் இருந்து விடுபடுவோம். இது மிகப் பெரிய பயணம். எனினும் நிச்சயமாக கடவுள் துணையால் நாம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஏனெனில், நம்பிக்கை தானே வாழ்க்கை!!

இந்த தருணத்தில் எனக்கு சிவகாமியின் சபதம் புத்தகத்தில் இருந்து சில வரிகள் நினைவிற்கு வருகிறது.

பெற்ற மகளை(சிவகாமி) பிரிந்து தவிக்கும் ஆயனரிடம் திருநாவுக்கரசர்(அப்பர் பெருமான்) இதை சொல்கிறார்.
“சிற்பியாரே! அடியேன் கண்ட உண்மையை உமக்குச் சொல்கிறேன்.
நாம் துன்பம் என்று நினைப்பது துன்பம் அல்ல!
இன்பம் என்று கருதுவது உண்மையில் இன்பம் அல்ல!
இன்ப துன்ப உணர்ச்சியானது உலக பாசத்தினால் ஏற்படுகிறது.
இந்தப் பாசத்தைத் தான் பெரியோர் மாயை என்கிறார்கள்.
மாயை நம்மைவிட்டு அகலும் போது இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை என்பதை அறிவோம்.அந்த இறைவனுடைய திருவருளாகிய பேரின்பம் ஒன்றுதான் மிஞ்சி நிற்கக் காண்போம்”

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages