இன்றைய காலத்தில் குடிப்பழக்கம் சாதாரணமான ஒன்றாகி விட்டது. பத்து பேர் ஒன்று சேர்ந்தால், குடிக்கமாட்டேன் என்று சொல்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு பேர் தான் இருக்கிறார்கள். இதைப் பார்த்து விட்டு, அந்த ஒன்று இரண்டு பேரும் குடிக்கத் தொடங்கி விடுகிறார்கள் என்பது மிகவும் வேதனையானதாகும்(ஒரு சில பேர் இருக்கிறார்கள். எவ்வளவு கட்டாயப்படுத்தினாலும் குடிப்பதில்லை என்று ஒரு திடமான முடிவுடன் வாழ்பவர்கள். அவர்களை நான் மனமாற பாராட்டுகிறேன்).
குடிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு இருக்கிறது. டாஸ்மார்க் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு பெருகி கொண்டே இருக்கிறது. ஏன் இந்த அவல நிலை என்பதை என்னுடைய முந்தைய போஸ்ட்களில் சொல்லி இருந்தேன். எனவே அதைப் பற்றி இங்கு பேசப் போவதில்லை. சனிக்கிழமை வந்தால் போதும், இரவு குடிக்காவிட்டால்,அது சனிக்கிழமையே இல்லை என்று நம் குடிமகன்கள் கூறுவார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆயிரக் கணக்கில் பார்களில் செலவு செய்கிறார்கள். இப்படி ஒரு கூட்டம் இருக்கையில் நாம் இன்னொரு கூட்டத்தையும் பார்க்க வேண்டும்.
நம் நாட்டில் வறுமை என்ற கொடிய நோய் இருப்பது எல்லாரும் அறிந்ததே. அவர்கள் வீட்டு குழந்தைகள் பணம் இல்லாத காரணத்தால், படிக்க முடியாமல், குழந்தை தொழிலாளர்களாய் மாறி, அவர்கள் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையை மேன்படுத்த வேண்டும் என்று என்றைக்காவது சிந்தித்தது உண்டா நண்பர்களே.
நம்மைப் படிக்க வைக்கும் பண வசதி இருந்ததால், நம் பெற்றோர் நம்மைப் படிக்க வைத்தார்கள். அதனால் இன்று நாம் எல்லாரும் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். இதுவே நாம் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தால், நம்முடைய நிலைமை என்னவாயிருக்கும் என்று எண்ணியது உண்டா?
அந்த குழந்தைகளுக்கு கல்வி கிடைத்தால் அவர்களும் நல்ல நிலைமைக்கு வருவார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல், அவர்களுடன் சேர்ந்து அவர்கள் குடும்பமும் முன்னேறும். அதன் பிறகு அவர்கள் நாலு பேரைக் கை கொடுத்து தூக்கி விடுவார்கள். மனிதர்களான நாம், சக மனிதர்களுக்கு உதவ வேண்டியது நம் கடமையே.
எந்த செலவைக் குறைத்து இவர்களுக்கு உதவுவது என்று தானே கேட்கிறீர்கள்? குடிப்பழக்கம் தான். வேறு என்ன இருக்க முடியும். குடியினால், ஒரு சில மணி நேரத்திற்கு தான் போதை கிடைக்கும். ஆனால், நம்மால் ஒரு குழந்தை கல்வி கற்று, அவர்களுடன், அவர்கள் குடும்பமும் முன்னேறும் போது, நமக்கு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி கிட்டுமே. எது உண்மையான மகிழ்ச்சி என்று என்பதை சிந்தித்து பாருங்கள்.
நம்மால் முடியாதது என்று ஒன்று கிடையாது. எனவே குடிப்பழகத்தை நிச்சயமாக விட முடியும்.
தானத்தில் சிறந்த தானம் கல்வி தானம்!!
2 கருத்துகள்:
பக்காவா இருக்குங்க உங்க கட்டுரை. நான் பொறுமையாக ஒரு வரி விடாமல் வாசித்தேன். நம்ம கடைப் பக்கமும் கொஞ்சம் வாங்க.
அத்தனையும் உண்மை!!
கருத்துரையிடுக