Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

சீதைக்கு இராமன் சித்தப்பா!!!!


விடிய விடிய இராமாயணம் கேட்டு விட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பா என்று சொல்ற கதையா இருக்கே !!!!
இந்த வாக்கியத்தை அறியாதவர் ஒரு சிலர் மட்டுமே. அனைவருக்கும் தெரிந்து இருக்க வேண்டிய ஒன்றை, ஒருவர் மறந்து இருந்தால், இந்த வாக்கியத்தைச் சொல்லி தான் கிண்டல் செய்வார்கள். நானும் சில முறை இதை பயன்படுத்திருக்கிறேன். ஆனால் நேற்று வரை, இந்த வாக்கியம் எங்கு பிறந்தது? ஏன் இப்படி ஒரு வாக்கியம் நடைமுறைக்கு வந்தது? எப்படி இது பிரபலமானது என்பது புரியாத புதிராகவே இருந்தது.

நேற்று ஒரு புத்தகம் படித்தேன். அதில் இந்த வாக்கியம் சம்பந்தமான கதை ஒன்று வந்தது. அதை உங்களுக்கு கூறுகிறேன்.

ஒரு ஊரில் பத்து வயது சிறுவன் ஒருவன் இருந்தான். சிறு வயதிலுருந்தே பள்ளிக்கு செல்லாமல் அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தான். அவன் உறுப்படியாக செய்யும் ஒரே காரியம், வயிறு முட்ட சாப்பிடுவது தான். அதனால் நன்றாக குண்டாக இருந்தான். தன் மகன் பள்ளிக்கு போகாமல், பொது அறிவும் இல்லாமல் மூட்டாளாக இருக்கிறானே என்று அவனுடைய தாய் பெரிதும் வருந்தி கொண்டிருந்தாள்.

அந்த சமயத்தில் ஊர் கோவிலில் இராமாயணம் நாடகம் நடக்க இருக்கின்ற செய்தி, அந்த தாய்க்கு தெரிய வந்தது. மூட்டாளாக இருக்கும் தன் மகன் அதை கேட்டால், அவனுக்கு சிறிதளவாவது ஞானம் கிடைக்கும், மூளையும் வளரும் என்று அவள் கருதினாள்.

அன்று இரவு வழக்கம் போல், சிறுவன் நன்றாக சாப்பிட்டான். அவன் சாப்பிட்ட பிறகு, கோவிலில் நடக்கும் இராமாயணம் நாடகத்தை பார்த்து வருமாறு அவனுடைய தாய் கூறுகிறாள். சிறுவன் மறுக்கிறான். பிறகு தாய் மிகவும் கட்டாயப்படுத்தி, அவனை அனுப்பி வைக்கிறாள். சிறுவன் விருப்பம் இல்லாமல் கோவிலை நோக்கி நடக்கின்றான்.

நாடகம் மேடையை பார்த்தவாறு பார்வையாளர் பகுதியின் நடுவில் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு உட்காறுகிறான். நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. அவன் வயிறு முட்ட சாப்பிட்டு வந்ததால், தூக்கம் அவன் கண்களில் தாண்டவம் ஆடத் தொடங்கியது. தூக்கத்தைக் கட்டுபடுத்த முடியாமல் தரையில் படுத்து தூங்கிவிடுகிறான்.

பிறகு குள்ளமாக இருக்கும் ஒரு சிறுவன், மேடையைப் பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அப்போது உறங்கி கொண்டிருக்கும் சிறுவனின் மேல் உட்கார்ந்து அவன் நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்தான். இரண்டு மணி நேரமும், அவன் மேல் உட்கார்ந்தே நாடகதைப் பார்த்தான்.

இதைக் கூட அறியாமல் சிறுவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான். நாடகம் முடிந்தது. அனைவரும் சென்றுவிட்டனர். ஒரு பெரியவர், தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

அவன் எழுந்து வீடு நோக்கி நடந்தான். வீட்டுக்கு சென்றவுடன், அவனுடைய தாய், “இராமாயணம் எப்படி இருந்தது” என்று கேட்டாள். அதற்கு அவன், “அருமையாக இருந்தது அம்மா.” அதைக் கேட்ட தாய் மகிழ்ச்சி அடைந்தாள். உடனே தாய், “சீதைக்கு இராமன் என்னடா வேணும்?” என்று கேட்டாள்.

அதைக் கேட்டு அவன் அதிர்ச்சி அடைந்தான். நாடகத்தைப் பார்த்திருந்தால் தானே அவனுக்குத் தெரியும். அவன் வாயில் வந்த ஒரு பதிலைக் கூறினான். “சீதைக்கு இராமன் சீத்தப்பா” என்று கூறினான்.

அதைக் கேட்ட தாய் ”விடிய விடிய இராமாயணம் கேட்டு விட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பா என்று சொல்கிறாயே!!!!”.
“அம்மா கேள்வி எல்லாம் கேட்காதே. எனக்கு உடல் முழுவதும் வலிக்கிறது. நான் இனிமேல் நாடகத்தைக் காண போகமாட்டேன்.” என்று அவன் கூறுகிறான்.
தன் மீது ஒருவன் அமர்ந்து இருந்ததால் தான் உடல் வலிக்கிறது என்று அறியாத மூட்டாளாக இருந்தான்.

”விடிய விடிய இராமாயணம் கேட்டு விட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பா என்று சொல்ற கதையா இருக்கே !!!!” என்பது இங்கு தான் பிறந்துள்ளது.

1 கருத்து:

ana சொன்னது…

yup i have heared this story before from my aunt....:)

Post Top Ad

Your Ad Spot

Pages