Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

சேரனின் பொக்கிஷம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்


பொக்கிஷம் திரைப்படம் இன்று வெளியானது. நாளேடு விளம்பரங்களில் இது ஒரு இலக்கிய வடிவில் இயல்பான காதல் கதை என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது என்னை ஈர்த்தது. சமீப காலமாக நான் நாவல்களைப் படிப்பதால் இந்த படம் எனக்கு பிடிக்கும் என்பது எனக்கு தெரிந்தது. அதுவும் முதல் நாளே பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தென். அதன்படி முதல் நாளான இன்றே நான் படம் பார்த்தேன்.

முத்தக் காட்சிகள், சண்டைக் காட்சிகள், இரட்டை அர்த்த நகைச்சுவைக் காட்சிகள், கானா பாடல்கள், ஹீரோ ஹீரோயின் நெருக்கமாக ஆடி பாடும் பாடல்கள், அதிவேக திரைக்கதை ஆகியவற்றை மட்டுமே நீங்கள் ஒரு திரைப்படத்தில் பார்க்க விரும்பினால் தயவு செய்து இந்த படத்தைப் நீங்கள் பார்க்காதீர்கள். நண்பர்கள் கூட்டத்துடன் விசில் அடித்து, கூச்சலிட்டு ஜாலியாக படம் பார்க்கும் நபரா நீங்கள்? கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு உகந்த படமல்ல.

ஒரு நாவலைப் படிக்கும் போது உங்களுக்கு ஏற்படும் உணர்வு, இந்த படம் பார்க்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக ஏற்படும். கல்கத்தாவில் இருக்கும் இம்ரானுக்கும், நாகப்பட்டினத்தில் இருக்கும் நதீராவுக்கும் இடையில் எற்படுகின்ற காதலைச் சுற்றியே இந்த கதை நகர்கின்றது. 1970 களில் இந்த கதை செல்கின்றது. ஆகவே இந்த காதலர்கள் தங்கள் காதலைப் பறிமாறிக் கொள்ள அவர்களுக்கு இருந்த ஒரே கருவி கடிதங்கள் தான். அந்த கடிதங்கள் தான் படத்தின் நாயகன்.

ஒரு நாவலை எவ்வளவு பொறுமையாக நாம் படிக்கிறோம். அதே அளவு பொறுமை இந்த படம் பார்க்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் தயவு செய்து நீங்கள் வேறு எதாவது படத்திற்கு செல்லுங்கள். இயக்குனர் சேரன் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். எந்த ஒரு இடத்திலும் அவர் யதார்தத்தை மீறவில்லை. கதைக்கு தேவையில்லாத எதையும் அவர் புகுத்தவில்லை. அதே போல் கதைக்கு தேவையான எவற்றையும் அவர் விட்டு விடவும் இல்லை.

சேரன் யதார்த்த நாயகன் என்று மறுபடியும் நீருபித்து இருக்கிறார். சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன். அதில் சேரன் குறிப்பிட்டிருந்த விஷயம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. “அடுத்த வேளை சாப்பாடுக்கு பணம் இல்லை என்ற நிலை வந்தாலும் ஒரு போலியான, பொய்யான, என் மனசாட்சிக்கு எதிராக ஒரு படத்தை நான் எடுக்க மாட்டேன்.”அதன் படியே அவர் இன்றும் படம் எடுத்து வருகிறார் என்பது அவருடைய தன்னம்பிக்கையை நீருபிக்கின்றது.

நாயகி பத்மப்பிரியா - இந்த படத்தில் மிகவும் அழகாக இருக்கிறார். அவர் இந்த படத்தில் நதீராவாக வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவருக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். சில காட்சிகளில் நம் கண்ணீரையும் வர வைக்கிறார். இதுவரைப் பார்க்காத பத்ம்ப்பிரியாவை நீங்கள் இந்த படத்தில் காணலாம்.

சபேஷ் முரளியின் மெல்லிய இசை இந்த கதையின் கூடவே வருகின்றது. அனைத்து பாடல்களும் இனிமையாக இருக்கிறது. குறிப்பாக “நீலா நீ வானம் காற்று” என்ற பாடல் மிக அருமையாக இருக்கிறது.பின்னனி இசையிலும் இவர்கள் கலக்கி இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இசையை பற்றி சொல்லுவதை விட கேட்பதே இனிமையாக இருக்கும். எனவே கேட்டு தான் பாருங்களேன்!!!சபேஷ் முரளி இசை அமைத்த 25வது படம் இது என்பது குறிப்படத்தக்கது.

படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. படத்தின் ஒளிப்பாதிவாளருக்கு பாராட்டுகள். 1970 இல் இருந்த சென்னை மற்றும் கல்கத்தாவை அழகாக உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குனர். அதை அற்புதமாக படம் படித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இவற்றிற்கு மேலாக பாரட்ட பட வேண்டியவர் இந்த படத்தின் தயாரிப்பாளர். ”இந்த அற்புதமான படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா, போட்ட பணம் திரும்பவும் கைக்கு வருமா?” என்று எண்ணாமல் “பல படங்கள் காசுக்காக தயாரிக்கிறேன், ஒரு படம் மன நிறைவுக்காக செய்யலாம்” என்ற எண்ணத்துடன் இப்படத்தை மிக அழகாக தயாரித்து இருப்பது பாராட்டுக்குரியது.

கண்களில் கண்ணீருடனும், ஒரு நல்ல படத்தைப் பார்த்தேன் என்ற திருப்தியுடனும் நான் தியேட்டரில் இருந்து வெளியே வந்தேன்.

ஆக மொத்தத்தில் இந்த படம் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

ungal review vai padithen.... mikka magilchi... naan enna ninaihu andha padathai editheno , adhai apadiye paarthadharku...
nandri..
cheran

Thangabalu சொன்னது…

நன்றி நிவேதா சேரன்

Post Top Ad

Your Ad Spot

Pages