Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

வியாழன், 11 நவம்பர், 2010

என்னுடைய பைக்!!

ஜூலை மாதம் சென்னையில் இருந்த போது நடந்த சம்பவம் இது.

ipod இற்கு தேவையான ear phone கள் வாங்க சென்னை ரிச்சி தெருவுக்கு சென்றேன். கணினி மற்றும் எலக்டரானிக் பொருள்கள் அங்கு குவிந்து கிடக்கும். சென்னையில் இருக்கும் அனைவரும் இந்த ரிச்சி தெருவை நன்கு அறிவர். பத்து ரூபாய் சிடியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களும் அங்கு கிடைக்கும். நானும் என் நண்பன் மகேஷும் என்னுடைய பைக்கில் அங்கு சென்று இருந்தோம்.

ரோட்டின் ஓரம் ஏராளமான பைக்குகள் நின்று கொண்டிருந்தன. அங்கு காலியான இடத்தைக் கண்டுபிடித்து நம் வண்டியை விடுவதே ஒரு சவாலான வேலைதான். அந்த சவாலான வேலையை முடித்து விட்டு உள்ளே சென்றோம். அங்கு இரண்டு மூன்று நீண்ட தெருகள் இருக்கின்றன. ரோட்டின் அகலம் மிகவும் குறைவே. அதனால் எப்பவுமே அந்த தெருகள் மக்களின் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும். எல்லா கடைகளும் ஒரே மாதிரி இருக்கும். எல்லா தெருகளிலும் கூட்டம் அதிகமாக இருப்பதால், சில நேரங்களில் எங்கு இருக்கிறோம், எப்படி திரும்பி செல்வது என்று தெரியாமல் திரு திரு என்று நான் முழிப்பதும் உண்டு.

இரண்டு மூன்று கடைகளில் தரம் மற்றும் விலையை சரி பார்த்துக் கொண்டு வெற்றிகரமாய் பொருளை வாங்கினேன். மகேஷ் லேப்டாப் மாடல்கள் பற்றி ஒரு கடையில் விசாரித்து விவரத்தை ஒரு பேப்பரில் குறித்து கொண்டான். வந்த வேலை முடிந்தது. பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப வேண்டியது தான்.

நடந்து கொண்டு இருக்கும் போது நாயர் கடை பஜ்ஜியின் வாசம் எங்களை இழுத்தது.
“அட அட, ஆறு மாதமாக பஜ்ஜி சாப்பிட முடியாமல் போச்சே டா. இது தான் சான்ஸ். இன்னும் மூன்று நாட்களுக்கு பிறகு இந்த பஜ்ஜியை பார்க்க கூட முடியாது”, என்று என் மனசு பஜ்ஜியை ருசிக்க என்னை அழைத்தது. கடைக்கு சென்று நன்றாக ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு நானும் என் நண்பனும் வண்டியை நிறுத்திய இடத்தை நோக்கி நடந்தோம்.

“டேய். இங்க தான் டா, வண்டியை விட்டோம். இப்ப வண்டியை காணுமே டா?”, என்று மிகுந்த பதற்றுடன் கேட்டேன்.
“இங்க தான் டா வண்டியை நிறுத்தினோம். அய்யோ, பட்ட பகலில் எவன் டா தூக்கிட்டு போனான்”, என்று அவனும் அதிர்ந்து போனான்.

“சார், இங்க ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு சிகப்பு கலர் பைக்கை நிறுத்தி விட்டு சென்றேன். இப்ப வண்டியை காணவில்லை. நீங்கள் பார்த்தீர்களா?”, என்று அங்கு சின்னதாய் ஒரு கடை நடத்தி வரும் வியாபாரியிடம் கேட்டேன்.

“நான் இங்க தான் இருக்கேன். நிறைய பேர் வராங்க. வண்டியை விடறாங்க, எடுக்கறாங்க. எத்தனையோ சிகப்பு கலர் வண்டி இருந்தது. நான் என்னபா பதில் சொல்றது. நல்லா தேடி பாருப்பா”, என்றார் அவர்.

“வண்டியை காணுமா? அச்சசோ!! தம்பி இங்கு அடிக்கடி பைக் கொள்ளை நடந்து கொண்டு தான் இருக்கிறது. போலீஸ் கூட மாறு வேடத்தில் திருடர்களை தேடிக் கொண்டிருந்தார்கள். படுபாவிங்க மாட்ட மாட்றாங்க.
ஒருவன் ஒரு வண்டியை விட்டு செல்லும் போது முதல் திருடன் வண்டியை விட்டவரின் பின்னாலேயே செல்லுவான். இரண்டாவது திருடனுக்கு தொலைபேசியில் வண்டியின் முதலாளி எங்கு இருக்கிறான் எங்கு போகிறான் என்று தகவல் கொடுத்துக் கொண்டே இருப்பான். இந்த நேரத்தில், இரண்டாவது திருடன் அந்த வண்டியின் மேல் எந்த பதற்றமும் இன்றி அமர்ந்து பல சாவிகளைப் போட்டு வண்டியின் பூட்டை திறக்க முயற்சி செய்வான்.
பூட்டை திறந்தவுடன் வண்டியை எடுத்துக் கொண்டு பறந்து விடுவான். இப்படி தான் தம்பி இந்த திருட்டு நடக்குது”, என்று அங்கு இருந்த ஒருவர் கூறினார்.

“ஒரு மாதம் ஜாலியாக இருந்தோமே. ஊருக்கு கிளம்புற நேரத்துல இப்படி ஆயிடுச்சே. வீட்டில சொன்னா ரொம்ப வருத்தப்படுவாங்க. இப்ப என்ன பண்றது. போலீஸ் ஷ்டேஷனுக்கு போலாமா? அண்ணனுக்கு கால் பண்ணலாமா?” என்று என் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து என்னை ஆழ்ந்த கவலையில் தள்ளியது.

பைக்கை இழந்து விட்டு பரிதாபமாய் ரோட்டின் ஓரம் நின்று கொண்டிருந்தேன். என் நண்பன் பக்கத்து தெருக்களில் எல்லாம் பைக்கை தேடிக் கொண்டிருந்தான். நான் பைக்கை நிறுத்தியிருந்த இடத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அதன் பின்னால் யாராவது வண்டியை தள்ளி விட்டு இருப்பார்களா என்று பார்க்க காரின் நான்கு மூளைகளிலும் பார்த்து கொண்டு இருந்தேன்.

“யார் டா நீ. காரையே சுற்றி சுற்றி பார்த்திட்டு இருக்க? திருட போறீயா ? என் முதலாளி காருடா அது. போலீசை கூப்பிடவா?”, என்று உரக்க குரலில் ஒருவன் கூவினான். அவன் சுமார் நாற்பது வயது ஆள் போல் இருந்தான். லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு சட்டைக் கூட அணியாமல் தலையில் கைக்கூட்டைக் கட்டிக் கொண்டு ஒரு வில்லன் போல் இருந்தான்.

”என் 50,000 ரூபாய் பைக் காணும் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். வாயை மூடிட்டு போடா. உன் முதலாளி காரை தூக்கிட்டு போகவா போரேன். பட்ட பகலில் எவனோ என் பைக்கை திருடிட்டு போய்ட்டான். திருடனை பிடிக்க துப்பு இல்ல. என் கிட்டே சவுண்டு விடரியா நீ. போலீசை கூப்பிடு. எனக்கும் ஒரு வேலை முடியும். போலீஸ் கிட்ட பைக் காணும் என்று புகார் கொடுத்து விட்டு நானும் கிளம்புவேன்”, என்று நானும் உரக்க கூரலில் கத்தினேன்.

அதன் பிறகு அவன் வாயை திறக்கவே இல்லை. மிகவும் அமைதியான எனக்கு அவ்வளவு தைரியம் எப்படி வந்தது என்பது வியப்பாகவே இருந்தது. நான் கத்துவதை பார்த்து நான்கு ஐந்து பேர் ஒரு கடையில் இருந்து வெளிவந்து பார்த்தார்கள். யாரும் வாயை தரக்கவில்லை. நம் ஊரில் அமைதியாய் இருந்தால் ஆயிரம் பேர் வாய் கூடுப்பார்கள். நாம் கத்த தொடங்கினால் எல்லாரும் அமைதி ஆகி விடுவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
நான் நேசித்த ஒன்றை இழந்து விட்ட அந்த நேரத்தில் வேறு எதுவும் என் நினைவில் இல்லை. முக்கியமாக பயம் சிறிது அளவு கூட இல்லை. அதனால் தான் அவ்வளவு தைரியத்துடன் பேச முடிந்தது.

”வீட்டில் போய் எப்படி சொல்லுவது. பைக் இல்லாமல் ஒரு வேலை கூட ஓடாதே. அடுத்த மூன்று நாட்கள் நிறைய வேலை இருக்கிறதே. இந்த நேரத்தில் வண்டியை தொலைத்து விட்டேனே. கவனமாக இருந்திருந்தால் இதை தவிர்த்து இருக்கலாமே.” என்று வருந்திக் கொண்டு நின்றிருந்தேன்.

வண்டியை தேடி சென்ற மகேஷ் வந்தான், “நாம் வண்டியை இங்கு நிறுத்தவில்லை. பக்கத்து தெருவில் தான் நிறுத்தினோம். வாடா அங்கு போய் பார்க்கலாம். வண்டி நிச்சயம் இருக்கும்” என்றான். அப்பதான் எனக்கு மூச்சே வந்தது. வண்டி இருக்கும் என்று நம்பிக்கையில் சென்றேன். வண்டி இருந்தது.

வரும் போது மிகவும் சந்தோஷமாக பைக்கை ஓட்டிக் கொண்டு வந்தேன்.ஒன்றை இழந்து பெறும் போது அதில் கிடைக்கும் சந்தோஷம் எல்லையற்றது.

---இந்த விஷயம் எங்க வீட்டில் யாருக்கும் தெரியாது. யாரும் சொல்லி விடாதீர்கள்!!!

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages