அலுவலகத்தில் சேர்ந்த பிறகு மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்படும் என்று சொன்னார்கள். எனக்கு எப்பொழுதும் மணிக்கணக்கில் உட்கார வைத்து பாடம் கற்றுக் கொடுக்கிறேன் என்று அனைவரையும் தூங்க வைக்கும் இந்த முயற்சி அறவே பிடிக்காது. கடவுளுக்கே பாடம் எடுத்தாலும் 30 நிமிடங்களிற்கு மேல் அவரால் பாடத்தை கவனிக்க முடியாது. காலையில் எட்டு மணிக்கு தொடங்கும் பயிற்சி இரவு 6, 7 மணி வரை செல்லும்.
ஒரு நாள் கிளம்பும் போது லதா என்பவர் ஒரு வேலையை கொடுத்து நாளை வரும் போது இதை முடித்திருக்க வேண்டும் என்று அனைவரிடம் சொன்னார்கள். இவ்வளவு நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்து விட்டு வீட்டில் வேறு வேலை செய்ய முடியுமா என்ன? நான் சாப்பிட்டவுடன் அசதியில் எனக்கே தெரியாமல் தூங்கி விட்டேன். யார் அந்த லதா? இவரை பற்றி நிச்சயம் சொல்லி ஆக வேண்டும். பயிற்சி துறையின் தலைவர். மிகவும் கடினமானவர். திட்டுவதற்கு கொஞ்சம் கூட அஞ்சாதவர். அலுவலகத்தில் சேரும் அனைவரும் இவருடைய பயிற்சியினால் தான் திறமையானவர்களாக இருக்கிறார்கள் என்று நிறைய பேர் சொல்லி நான் கேட்டதுண்டு.
மறுநாள் அலுவலகத்திற்கு வந்தவுடன் அவசர அவசரமாய் அந்த வேலையை என் கணிணியில் செய்து கொண்டு இருந்தேன். முடிப்பதற்குள் லதா வந்து விட்டார்.
“கடவுளே, என்னை கூப்பிட கூடாது. என்னை கூப்பிட கூடாது” என்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். இந்த மாதிரி தருணங்களில் கடவுளை வேண்டிக் கொள்ள நான் மறப்பதில்லை. பயந்து கொண்டே உட்கார்ந்து இருந்தேன். ”தங்க பாலு” என்ற குரல் என் காதில் வந்து விழுந்தது. “அய்யோ, ஆண்டவா காலை வாரி விட்டாயே. இன்னிக்கு நான் செத்தேன்” என்று பயந்து கொண்டே எழுந்தேன்.
எனக்கு பள்ளியிலோ, கல்லூரியிலோ மாணவர்களின் முன் நின்று, பேசிய அனுபவம் இல்லை. அதனால் மிகுந்த பயத்துடன் நடந்தேன். நான் உருவாக்கியிருந்த முழுமை பெறாத diagram ஐ projector இல் காண்பித்து ஒரு நிமிடத்திற்குள் பயத்தில் மிகுந்த படப்படப்புடன் கூட்டத்தைப் பார்க்காமலே பேசி முடித்தேன்.
”என்னது இது, இது ஒரு diagram ஆ. இதை கூட உன்னால் சரியாய் செய்ய முடியவில்லை. நீ பயிற்சி முடிந்ததும் பிராஜெக்டில் என்ன செய்ய போறாய்? கூட்டத்தைப் பார்ப்பதற்கே பயப்படுகிறாய். நாளை மீட்டிங்கில் client உடன் எப்படி பேசுவாய்? திறமை இருக்கிறவர்களே தடுமாறுகிறார்கள். நீ என்ன செய்ய போகிறாய்” என்று என்னை பார்த்து கத்தினார்கள். அதன் பிறகு திட்டு எனக்கும் மட்டும் இல்லை. என்னுடன் அந்த அறையில் இருந்த 17 நபர்களுக்கும் தான். நின்று கொண்டிருந்தது நான் மட்டும் தான். அதனால் தான் என்னவோ என்னை மட்டுமே திட்டுவதை போல் உணர்ந்தேன். இருந்தாலும் மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். “பயப்படாதே, தைரியமாக நில். இதற்கு எல்லாம் பயப்படலாமா?”.
லதா கத்திக் கொண்டே இருந்தார்கள். நானும் அசையாத பொருளை போல் நின்றுக் கொண்டிருந்தேன். அவர் பேசியதை நான் கவனிக்கவே இல்லை. அந்த வழியாக போகும் ஊழியர்கள் எல்லாம் என்னை பரிதாமாக பார்த்து சென்றார்கள். ஒரே அசிங்கமா போச்சே. இவங்க வேற முடிக்க மாட்டேங்கிறாங்க. எப்படா விடுவாங்க, போய் உட்காரலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன்.
”உன்னை எப்படி வேலையில் சேர்த்தார்கள் என்று சத்தியமாக எனக்கு தெரியவில்லை. உன்னை திட்டுவதற்கு பதில் உன்னை வேலைக்கு தேர்ந்து எடுத்த நபரை தான் திட்ட வேண்டும். போ. போய் உட்காரு” என்று லதா சொன்னவுடன் ஜாலியாக போய் உட்கார்ந்தேன். பதினைந்து நிமிடம் திட்டு முடிவுக்கு வந்தது.
இப்படி ஆரம்பித்த என்னுடைய அலுவலக வாழ்க்கை ஓடியது. சில மாதங்கள் அல்ல. பல மாதங்கள். நான் அந்த அலுவலகத்தில் 28 மாதங்கள் பணி புரிந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்தின் முன்னர் பயமில்லாமல் நிக்கவும், பேசவும் என்னை நான் பழக்கிக் கொண்டேன். நான் தமிழில் ஒரு நல்ல எழுத்தாளர் என்று கம்பீரத்துடன் சொல்லுவேன். அதே போல் நான் ஒரு நல்ல பேச்சாளர் என்று சொல்லும் நாளும் விரைவில் வரும் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. இன்று ஒரு துறையில் வல்லுனராய் இருக்கும் ஒருவன் சில ஆண்டுகளுக்கு முன்னால் அந்த துறையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவராய் இருந்திருப்பான்.நாம் வளரும் வீதம், நம் நண்பர்கள் குழு என்று பல்வேறு சிறு சிறு விஷயங்களால், கற்கும் திறன் சிலருக்கு கற்பூரம் போல் இருக்கும், சில பேருக்கு கொஞ்சம் குறைவாக இருக்கும்.
“உனக்கு ஒன்றுமே தெரியாது. நீ எதுக்குமே உபயோகம் இல்லை” என்று ஒருவன் உன்னை பார்த்து சொன்னால் அது தான் உண்மை என்று ஆகி விடுமா?
”போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், என் கடமை பணி செய்வதே”, என்று தானே சொல்ல வேண்டும்.
நமக்கு என்று ஒரு பாதை, நமக்கு என்று ஒரு குறிக்கோள் வைத்து யார் என்ன சொன்னாலும், சோர்வு அடையாமல் நம்முடைய பாதையில் நம்முடைய குறிக்கோளை நோக்கி தைரியமாய் சென்றால் தானே நாம் மனிதர்கள்?
திங்கள், 8 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
2 கருத்துகள்:
yeah very true. although the incident is sad, things like this really make us strong, determined and determine our future success!
மிகவும் அருமை!!
கருத்துரையிடுக