Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

புதன், 29 டிசம்பர், 2010

தீவிர ரசிகன்!!

ராஜா மிகவும் பிசியாக ஒரு தியேட்டரில் இரவு 2 மணிக்கு வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய தலைவனின் படம் அடுத்த நாள் வெளியாகிறது.
அதனால் அவன் தலைவனின் கட் அவுட் வைப்பது மற்றும் தோரணம் கட்டும் வேலையில் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் உடன் நண்பர்கள் இரண்டு பேரும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள்.

”தலைவன் படம் நாளைக்கு ரீலிஸ். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்துக்கு தான் ஒரு வருடமா காத்திக்கிட்டு இருக்கேன். வழக்கம் போல இந்த படமும் மிக பெரிய ஹிட் ஆகணும். நம்ம தலைவன் சீக்கிரமா அரசியலில் குதிக்க வேண்டும். இது தான் என்னுடைய ஆசை.” என்று வேலை செய்து கொண்டே ராஜா தன்னுடன் இருப்பவனுடன் பேசிக் கொண்டிருக்கிறான்.

இரவு முழுவதும் வேலை செய்து கொண்டிருந்தான். காலை கடைக்குச் சென்று பட்டாசு, பூ மற்றும் இனிப்புகளை வாங்கிக் கொண்டு தியேட்டரில் காத்துக் கொண்டிருந்தான்.

“எப்ப டா 12 மணி ஆகும். என்னால வேய்ட் பண்ணவே முடியல” என்று ராஜா புலம்புகிறான்.

11.30 மணி ஆனது. பட்டாசை வெடித்தான். வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகளைக் கொடுத்தான். மகிழ்ச்சியுடன் தியேட்டரின் உள்ளே சென்றான்.

”தலைவா, தலைவா” என்ற கரகோலி தான் கேட்கிறது. தலைவர் பேசுவதே கேட்கவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் அமைதி ஆகவில்லை.அப்படியே முழு படமும் முடிந்து விட்டது. அனைவரும் படம் நன்றாக இருப்பதாக கூறி மகிழ்ச்சியுடன் வெளிவந்தனர்.

நம்முடைய ராஜாவின் அடுத்த வேலை தான் என்ன. அவன் கல்லூரி மாணவனா அல்லது எங்காவது வேலை செய்கிறானா? அவன் அடுத்து எங்கு தான் செல்கிறான் என்று பார்ப்போம்.
பஸ்சில் ஏறினான். நேராக கமலா தியேட்டருக்கு சென்றான். பிளாக்கில் 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குகிறான். ”இவ்வளவு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குகிறானே? பெரிய உத்தியோகத்தில் இருப்பானோ?” என்று நீங்கள் கேட்பது எனக்கு நன்றாகவே கேட்கிறது. உங்கள் கேள்விக்கு விடை விரைவில் கிடைக்கும்.

கமலா தியேட்டரிலும் படம் முடிந்தது. இப்போது ராஜா எங்கு போகப் போகிறான். நண்பனுக்கு போன் செய்கிறான், “மச்சி தலைவர் தாறுமாறு டா. படம் பட்டையை கிளப்புது. இரண்டு தடவை பார்த்துட்டேன் டா. நீ ஈவினிங் ஷோ புக் பண்ணிருக்கல. ஒரு டிக்கெட் கிடைக்குமா டா? நான் வேணுமுனா கூடுதல் காசு கொடுக்கிறேன். மச்சி பீளிஸ் மச்சி”, என்று நண்பனிடம் கெஞ்சினான்.

அவன் நண்பன் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாதுரியமாய் பேசுகிறான், “மச்சி, ஒரு கூடுதல் டிக்கெட் இருக்கு டா. ஆனால் என் நண்பன் ஒருவன் 500 ரூபாய்க்கு அதை வாங்கி கொள்வதாக சொல்லிருக்கான் டா”

“மச்சி நான் 700 ரூபாய் கொடுக்கிறேன். எனக்கு கூடு டா”

“சரி மச்சி, நீ கெஞ்சறது, எனக்கு கஷ்டமா இருக்கு. சரி உடனே என் வீட்டிற்கு வா. 700 ரூபாய்க்கு உனக்கே அந்த டிக்கெட்டை கொடுக்கிறேன்”

அங்கு சென்று டிக்கெட் வாங்கிவிட்டான். தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து முடித்தான். காலையில் இருந்து எக்கச்சக்கமா பணம் செலவு பண்ணி மூன்று தடவை படத்தை பார்த்தான். ஆனால் பாவம் அவனுடைய வயிற்றிற்கு எதுவும் கொடுக்காமல் தண்டனை கொடுத்தான்.

சரி, இப்ப ராஜா எங்கே போய்க் கொண்டிருக்கிறான். வேறு எங்கு போவான். இரவு ஆகி விட்டது. வீட்டிற்கு தான் செல்வான்.

“வா டா. எங்கே டா போனாய்? வந்து சாப்பிடு”, என்றாள் அவனின் தாயார்.

“தலைவன் படத்துக்கு போய்ட்டு வரேன் மா”, என்று கூறிவிட்டு சாப்பிட தொடங்கினான். நாள் முழுவதும் சாப்பிட காரணத்தினால் பேய் பசி. நன்றாக சாப்பிட்டான். பசி தீரும் வரை சாப்பிட்டான்.

மறு நாள் காலை ராஜா எழுந்தான். இவன் என்ன தான் செய்கிறான் என்பதை பார்ப்போம்.
நேராக ஒரு டீக்கடைக்கு செல்கிறான். அங்கு இருக்கும் அவன் நண்பர்களிடன் பேசுகிறான், “மச்சி, தலைவர் படம் தாறுமாறு டா. மூன்று தடவை பார்த்து விட்டேன் டா. சிக்கிரம் போய் பாருங்கடா”, என்று தலைவனின் படத்தை நன்றாக விளம்பரப்படுத்தி கொண்டிருந்தான். மதியம் வரை அங்கு நேரத்தை கழித்தான்.

வீட்டிற்கு வந்தான். மதிய உணவை சாப்பிட்டான். மறுபடியும் வெளியில் புறப்பட்டான். எங்கு செல்கிறான். ஒரு வேளை மதியத்திற்கு பிறகு தான் இவனுடைய வேலை அல்லது கல்லூரி தொடங்கும் போல இருக்கு? நேராக தியேட்டர் வாசலுக்கு சென்றான். படம் முடிந்து வெளியில் வருபவர்களைப் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டான். என்ன ஒரு ரசிகன். உண்மையான ரசிகன்,வெறித்தனமான ரசிகன். இரவு வரைக்கும் தியேட்டரில் வெட்டியாக நேரத்தைக் கழித்தான். வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு, உறங்கிவிட்டான்.

அவன் என்ன தான் செய்கிறான். படிக்கிறானா, வேலை செய்கிறானா? பார்ப்போம்!!

ராஜா 2007 ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தான். “அதன் பிறகு அவன் என்ன படிக்கிறான்?”

அதன் பிறகு அவன் படிக்கவே இல்லை.

“வேலை செய்து கொண்டிருக்கிறானா?”
வேலையெல்லாம் செய்யவில்லை. வெட்டி தனமாக ஊரைச் சுற்றுவது தான் அவன் முழு நேர வேலை.

”மூன்று வருடமாக சும்மா இருக்கிறானா. அச்சச்சோ”
ஆமாம் சும்மா தான் இருக்கிறான்.

ராஜாவின் குடும்பத்தைப் பற்றி பார்ப்போம். ராஜாவின் தந்தை பத்து வருடங்களுக்கு முன்னரே இறந்து விட்டார். ராஜாவின் தாயார் சில வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்திக் கொண்டு வருகிறாள்.

ராஜாவை பார்த்தோம், அவன் அம்மாவை பார்த்தோம். இன்னோரு ஒருவரும் இந்த கதையில் இருக்கிறார்கள்.

யார் அது? அவனுடைய காதலி ராணி.

“மூன்று வருடமாக சும்மா இருப்பவனுக்கு ஒரு காதலியா. சுப்பரோ சுப்பர். இது தான் கதையில் ஹலைட்” என்று நீங்கள் முனுமுனுப்பது எனக்கு கேட்கிறது.

ஒரு சின்ன flash back....

தலைவர் படத்துக்கு வழக்கம் போல் முதல் நாள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறான். காலை 9 மணி படத்திற்கு 6 மணிக்கே வந்து விட்டான்.
முற்றிலும் ஆண்கள் கூட்டம் ஆக்கிறமிக்க 7 மணிக்கு ஒரு பெண் தன்னுடைய தாயுடன் தியேட்டருக்கு வந்தாள்.

“தலைவருக்கு இப்படி ஒரு தீவிர ரசிகையா. சுப்பர் மச்சி”, என்று ராஜா தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறான். 9 மணி ஆகி விட்டது. படமும் ஆரமித்தது. விசில் சத்ததுடன் காட்சி இனிதாய் நிறைவேறியது. ராஜாவுக்கு மிகுந்த திருப்தியையும் கொடுத்தது.
இவன் திரையறங்கில் இருந்து வெளியே வந்து கொண்டு இருக்கிறான். காலையில் பார்த்த அந்த பெண்ணும் வெளியே தன் தாயுடன் வந்து கொண்டு இருக்கிறாள். மிகவும் அழகாக இருக்கும் அந்த பெண்ணைப் பார்க்காமல் அவன் கண்கள் எப்படி வேறு பக்கம் திரும்பும்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ராஜா.

திடிரென்று அந்த பெண் மயக்கம் போட்டு விழுந்தாள். ராஜாவுக்கு மிகுந்த அதிர்ச்சி. விரைவாய் செயல்பட்டான். ஆட்டோவை நிறுத்தினான்.
“அந்த பெண்ணைத் தூக்கிட்டு வாங்க மா” என்று நின்றிருந்த சில பெண்களை பார்த்து ராஜா கத்தினான். அந்த பெண்ணின் தாயாரும் ஆட்டோவில் ஏறினார்கள். ராஜா முன் சீட்டில் உட்கார்ந்து இருந்தான்.

“என்ன மா. பொண்ணுக்கு pressure ஏதாவது இருக்கா. மயக்கம் போட்டுச்சு”
“அதெல்லாம் இல்ல தம்பி. பொண்ணு தலைவரோட தீவிர ரசிகை. படம் பார்க்கணும் என்ற ஆவலில் இரவு முழுக்க தூங்கவில்லை. காலையில் ஒரு காபி கூட குடிக்காம கிளம்பி வந்துட்டா, அதான் பசியில் மயக்கம் போட்டு இருப்பா”, என்று தாயார் கூறினாள். அதை கேட்டவுடன் ராஜா மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றான். அவளும் தீவிர ரசிகையா?
அவனுக்குள் ஒரு புது வித உணர்வு. காதல் பாட்டுகள் எல்லாம் அவன் காதில் ஒலித்தன. மகிழ்ச்சியில் திக்குமுக்கு ஆடினான்.

flash back முடிந்தது.

இப்படி தாங்க இவன் லவ் ஸ்டார்ட் ஆச்சி. அதுக்கு அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு பொண்ண சம்மதிக்க வைச்சான். இப்ப தலைவனால் இணைந்த காதல் ஜோடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சரி எல்லாம் நல்லப்படியாக தான் சென்று கொண்டு இருக்கிறது. வாழ்கையில் நல்லது கெட்டது இருக்கத் தானே செய்யும்.

“அப்டினா அடுத்த சீன்ல ஏதாவது கெட்டது நடக்கப் போகுதா” என்று நீங்கள் கேட்கீறீர்கள். விடை இதோ.

ராஜாவின் அம்மா கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்கள். இளசுகளுக்கு காதலி தன் பைக்கில் உட்கார்ந்தால் போதும், தலை கால் புரியாது. வண்டியை கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக ஓட்டுவார்கள். அப்படி ஒருவன் தன் காதலியுடன் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் கடை தெருவில் மிகவும் வேகமாக குறுக்கிலும் நெடுக்கிலும் ஓட்டிக் கொண்டிருந்தான். வண்டி கட்டுப்பாடு இழந்து ராஜாவின் தாயார் மீது மோதியது.

அவள் கீழே விழுந்து விட்டாள். இங்கு வண்டியை நிறுத்தினால் அனைவரும் அடித்தே கொன்று விடுவார்கள் என்று பயந்து அவன் அப்படியே கிளம்பி விட்டான்.

ராஜாவின் தாயார் இரத்தத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த நல்ல உள்ளங்கள் சில பேர் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தான் ராஜா.

“உங்கள் தாயாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கட்டி விட்டு, ரசீதுடன் என்னை வந்து பாருங்கள். இந்த அறுவை சிகிச்சையை நாளைக்குள் செய்தாக வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களின் தாயாரின் உயிருக்கு ஆபத்து”, என்று டாக்டர் ராஜாவிடம் கூறினார்.

ஒரு லட்சம் ரூபாய்க்கு நான் எங்கு போவது என்று கதறி அழுதான். நண்பர்கள் எல்லாரையும் தொலைபேசியில் அழைத்து உதவி கேட்டான். நூறு ரூபாய் கொடுப்பதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை. பின் காதலிக்கு போன் செய்தான். விவரத்தை கேட்ட காதலி மிகவும் வருந்தினாள். “நான் என் செயின், வளையல் மோதிரம் ஆகியவற்றை தருகிறேன். அதை விற்றால் கண்டிப்பாக குறைந்தது 25 ஆயிரம் கிடைக்கும்.
அதற்கு மேல் என்னிடம் கொடுக்க ஏதும் இல்லையே” என்று கூறி அழுதாள் காதலி.

“நீ அழாதே. மிக்க நன்றி. மீதி பணத்திற்கு நான் எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன்”, என்றான் ராஜா.

உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லாரையும் கேட்டான். ஒன்றும் பலனில்லை. தலைவர் வீட்டிற்கு சென்றான்.
“அவர் ஊரில் இல்லை. அமெரிக்காவிற்கு சூட்டிங்கிற்கு போயிருக்கிறார். ஒரு மாதம் கழித்து தான் வருவார்” என்று வீட்டு காவலன் கூறினான்.

என்ன செய்வது என்றே புரியவில்லை. டாக்டர் கொடுத்த அவகாசம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் முடிய போகிறது. அவனுடைய தொலைபேசி அழைத்தது.
“உங்க அம்மா கடைசியாக உங்களிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்கிறார்கள். உடனடியாக வாருங்கள்” என்று நர்ஸ் கூறினார்.

“கடைசியாக பேச வேண்டுமா!!! ஆண்டவா, சிறு வயதிலேயே என் அப்பாவை எடுத்துக் கொண்டாய். இப்போது என் அம்மாவுமா”, என்று கதறிக் கொண்டே மருத்துவமனையை நோக்கி ஓடினான்.

”டாக்டர், என்னால் இந்த 25 ஆயிரம் ரூபாயை தான் திரட்ட முடிந்தது. இதை வாங்கிக் கொண்டு அறுவை சிகிச்சை செய்யுங்கள். மீதி பணத்தை விரைவில் தருகிறேன்”, என்றான் ராஜா.

“ராஜா. இனிமேல் எந்த சிகிச்சையும் பயனளிக்காது. நேரம் முடிந்து விட்டது. உங்களின் தாமதம் உங்களின் தாயாரின் உயிரை இன்னும் சில மணி நேரங்களில் பறிக்க போகிறது.
கடைசியாக ஏதாவது பேச வேண்டும் என்றால் விரைந்து சென்று பேசுங்கள்”, என்றார் டாக்டர்.

அம்மாவின் அருகில் அவன் காதலி நின்று கொண்டிருக்கிறாள்.
“வாங்க. உங்க அம்மா உங்க கிட்டே பேசணும் என்று சொன்னார்கள்”, என்றாள் காதலி.

“வாடா. ஏதோ நான் இருக்கும் வரைக்கும் உனக்கு எந்த வித கஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன். இப்போது நானும் போக போகிறேன். உனக்கு இந்த பொண்ணு தான் டா இனிமே எல்லாம். அவளை பாசமாக பார்த்துக்கொள். இந்த சினிமா தலைவர் என்று ஊரைச் சுற்றுவதை தயவு செய்து நிறுத்தி விட்டு, வேலைக்குச் சென்று பணம் சம்பாதித்து,
இவளின் தந்தையிடம் போய் பெண் கேள். உன்னை திருத்த தான், ஆண்டவன் இதை நடத்திருக்காரு போல. நான் சாகப் போகிறேன் என்ற கவலை எனக்கு இல்லை.
நான் செத்து நீ திருந்திடுவாய் என்ற நம்பிக்கையில் நான் தைரியமாக சாகப் போகிறேன். இந்த பெண்ணைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள். நான் இப்போது போனாலும் விரைவில் வருவேன்.இவளின் வயிற்றில் மகளாய் வந்து பிறப்பேன். உங்கள் இருவரின் மகளாய் வந்து பிறப்பேன்”, என்று முடிக்கும் போது அவளின் மூச்சு நின்று விட்டது.

”அம்மா, அம்மா தப்பு பண்ணிட்டேன் மா. என்னை மன்னிச்சிடு மா. உன்னை நானே கொன்று விட்டேன் மா. என்னை மன்னிச்சிடு” என்று கதறி அழுதான். காதலியும் துக்கத்தை அடக்க முடியாமல் கதறி அழுதாள்.

சில வருடங்களுக்கு பிறகு........

ராஜா சொந்தமாக மளிகை கடை நடத்துகிறான். அவனும் அவன் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை. தாயாரின் பெயரையே அவளுக்கு வைத்து இருக்கிறான் ராஜா.தாய் சொன்னது போல் அவளே மகளாக வந்து பிறந்து விட்டாள்.

“மச்சி, தலைவர் படம் நாளைக்கு ரீலிசாகுது. எல்லாரும் தலைக்கு 500 ரூபாய் கொடுக்க வேண்டும். பட்டாசு, கட் அவுட், வாழை மரம் என்று தூள் கிளப்பிடுவோம்”, என்று சில கல்லூரி மாணவர்கள் அவன் கடையின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

“தம்பிகளா!! படம் பாருங்க, நல்லா ரசிங்க. இப்படி தேவை இல்லாம பணம் செலவு பண்ணுங்கனு உங்க தலைவர் உங்ககிட்டே சொன்னாரா. அப்புறம் எதுக்கு இப்படி செய்யறீங்க. வீட்டை கவனிங்க, நல்லா படிங்க. முடிந்த வரைக்கும் பிறருக்கு உதவி செய்யுங்க. இதை தான் உங்க தலைவர் நேற்று டிவியிலும் சொன்னார். இப்பவே திருந்தினால் நல்லது. இல்லையேன்றால் என்னை மாதிரி ஒரு பெரிய இழப்பிற்கு பிறகு தான் இது உங்களுக்கு புரியும்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் ராஜா.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages