
நண்பன் படம் வெளியான பிறகு, அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்படவில்லை. காரணம் நான் ஹிந்தியில் படத்தைப் பார்த்து விட்டேன். மேலும், சமீப காலமாக நான் தமிழ் நாவல் படிப்பதிலும், திருக்குறள் படிப்பதிலும் என்னுடைய பெரும்பாலான நேரத்தை செலவு செய்து கொண்டு இருந்தேன்.
நண்பன் படம் வெளியானதில் இருந்து, அதற்கு அனைத்து தரப்பு மக்களிடமும் இருந்து நல்ல விமர்சனங்களே வந்து கொண்டு இருக்கின்றன. தூங்கிக் கொண்டு இருந்தாலும், விஜயைக் கிண்டல் பேசும் நண்பர்களும், இந்த படத்தைப் புகழ்ந்து பேஸ்புக்கில் எழுதி இருந்தார்கள். “மாற்றான் வீட்டு தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு”, என்று அவர்கள் கூறியது படத்தின் மேல் எனக்கு ஒரு ஆவலை உண்டாக்கியது.
இது நான் பார்க்க வேண்டிய படம் தான் என்று மனசு சொல்ல, படத்தைப் பார்த்தேன். படம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நினைத்தது போல், நல்ல படத்தையே பார்த்திருக்கிறேன் என்ற திருப்தி!!
ஏன் எனக்கு நண்பன் படம் பிடித்திருந்தது
1) பரீட்சை, மார்க் என்பது வாழ்க்கை இல்லை. வாழ்க்கை என்பது வேறு.
2) மனதுக்கு பிடித்ததை நம்முடைய வேலையாய் பெற்று, அதை மனமகிழ்ந்து செய்வது.
3) நண்பர்கள் கையைப் பிடித்து நல் வழியைக் காண்பிப்பது.
4) எதிர்காலத்தை நினைத்து பயத்துடன் நிகழ்காலத்தை கழிக்க கூடாது.
5) கல்வி நாம் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள போகிறோம் என்ற ஆவலைக் கொடுக்க வேண்டுமே தவிர, மார்க் வாங்க நான் இதைப் படித்த ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த கூடாது.
6) படிப்பதைப் புரிந்து படிக்க வேண்டும், அது அறிவாய் பெற்றிட வேண்டும். பெற்ற அறிவை நுட்பமாக பயன்படுத்தவும் தெரிய வேண்டும். கல்வி திட்டம் இது போல் மாற்றப்பட வேண்டும்.
என்று இன்னும் ஏராளமான நல்ல கருத்துகளை எடுத்துரைக்கிறது இந்த திரைப்படம். கல்வி என்பது என்ன? அது எவ்வாறு அமைந்திட வேண்டும் என்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விளக்கிடும் பாடமாய் இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு, மார்க் மட்டும் வாழ்க்கை இல்லை, செய்முறை அறிவு தான் மாணவனின் வாழ்க்கைக்கு தேவையான சொத்தாக விளங்கும் என்பதை புரிய வைக்கும் விதமாய் கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்.
இந்த காட்சி எனக்கு பிடித்திருக்கிறது, அந்த காட்சி எனக்கு பிடித்திருக்கிறது என்று என்னால் சொல்ல இயலாதபடி அனைத்து காட்சிகளும் நன்றாகவே இருந்தது. இந்தியில் இருந்து அப்படியே எடுத்து இருந்தாலும், வசனங்களில் இருக்கும் சக்தியே படத்தை ஜெயிக்க வைத்திருக்கிறது என்று கூறலாம். எந்திரன் என்னும் படத்தை எடுத்த பிறகு, ஒரு அர்த்தமுள்ள படத்தைக் கொடுக்க வேண்டும், ரீமெக் படம் தானே என்று ஏளனம் பேசுவோர் பேசட்டும். “என்னுடைய மன நிம்மதிக்கு நான் இந்த படத்தை எடுத்து தமிழ் மக்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்”, என்று இயக்குனர் சங்கர் இந்த படத்தை நமக்கு கொடுத்து இருக்கிறார்.
சண்டை காட்சிகள் இல்லாத விஜய் படத்தைப் பார்த்து நிறைய வருடங்கள் ஆகின்றன. நண்பன் படத்திற்கு முன் ஒரு சண்டை காட்சி கூட இல்லாமல் வெளிவந்த விஜய்யின் திரைப்படம் என்னவென்று தங்களுக்கு தெரியுமா? உங்கள் பதிலை பதிவு செய்யுங்கள்.
இந்த நல்ல படத்தில் வேலை செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றியும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக