உலகத்தில் பெரும்பாலான இடத்தை கடல் நீரால் சூழ வைத்தான். அப்படி செய்தவன், அதை குடிக்கும் தண்ணீராய் படைத்திருந்தால், தண்ணீர் பிரச்சனை இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம். ஆனால், அதை உப்புத் தண்ணீராய் படைத்தான். தூரத்தில் இருந்து பார்க்கும் போது, குடி நீர் என்று நம்பி மனிதர்கள் அருகில் வந்து, பின்னர் குடித்த பின்னர், அது உப்பு தண்ணீர், குடி தண்ணீர் அல்ல என்று உணரும்படி செய்கிறான்.
குடிதண்ணீரை எங்கு ஒளித்து வைத்தான்?? பூமிக்கு அடியில். பல அடி பூமிக்குள் தோண்டிய பின்னர் தான் அதை எடுக்க முடியும் என்றும், கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என்று உணர்த்தவும் அப்படி செய்தான். வெளியில் இருக்கும் கடல் நீர் உண்மையான நீர் அல்ல, அது வேறு ரகசியமான இடத்தில் இருக்கிறது என்று உணர்த்தவும் அப்படி செய்தான்.
குடி தண்ணீரை இவ்வளவு ஆழத்தில் புதைத்து வைத்தவன், உண்மையான மகிழ்ச்சியை எங்கு, எவ்வளவு ஆழத்தில் புதைத்து வைத்து இருக்கிறான்?
வெளியில் பலவற்றைப் பார்த்து ”இது தான் மகிழ்ச்சி” என்று மனிதன் நம்பினான். ஆனால், அது அவனுக்கு நிரந்திர மகிழ்ச்சியை தருவதில்லை. ஒன்றினால் சில காலம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. பின்னர் அவனுக்கு அதில் மகிழ்ச்சி கிடைப்பதில்லை. வேறொன்று தான் மகிழ்ச்சி என்று தேடி பெறுகிறான். இப்படி அவன் மகிழ்ச்சியை வெளியில் தேடிக் கொண்டே இருக்கிறான். ஆனால் கடவுள் மகிழ்ச்சியை எங்கு ஒளித்து வைத்து இருக்கிறார்? அவனுடைய மனதிற்குள். இது தண்ணீரைப் போல் சில அடி தோண்டினால் கிடைத்து விடாது. பல லட்சம் அடிகள் மனதைத் தோண்டி உள்ளே சென்று பார்த்தால் தான், அது கிடைக்கும் என்று நிர்மானித்தான்.
லட்சத்தில் ஒருவனே அவ்வளவு ஆழத்திற்கு சென்று உண்மையான மகிழ்ச்சியைப் பெறுகிறான். கடவுளை உணர்கிறான். உலக ரகசியத்தை உணர்கிறான். பிற மக்களோ, கடல் தண்ணீரை தூரத்தில் இருந்து குடி தண்ணீர் என்று நம்புவதைப் போல், வெளியில் இருக்கும் மகிழ்ச்சியை உண்மையான மகிழ்ச்சி என்று எண்ணி மாயையில் சிக்கி தவிக்கிறார்கள்.
கடவுள் மிகப் பெரியவன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக