
இயக்குனர் அவர்களுக்கு பணக்கார தயாரிப்பாளர் கிடைத்திருந்தாலும், படத்தின் பட்ஜெட் அதிகம் இல்லை என்பது சொல்லப்பட்டிருக்கும். தயாரிப்பாளரின் மகன் தான் ஹீரோ, ஆனால் அவருக்கு நடிக்கும் திறன் அதிகம் இல்லை என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும். வேலை செய்ய போகும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே புதியவர்கள், இசையமைப்பாளர் தமனைத் தவிர.
ஒரு சராசரி இயக்குனருக்கு இப்படி ஒரு டீம் கிடைத்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?தமனை வைத்து ஒரு ஜந்து பாடல்கள் உருவாக்கியிருப்பாளர்கள். நடனம் ஆடத் தெரியாத ஹீரோவைக் கொடுமைச் செய்து ஆட வைத்து, பார்க்கும் மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கி இருப்பார்கள். ஹீரோ அரசியல் குடும்பத்தில் இருப்பதால், ஒரு ஆக்ஷன் ஸ்டோரி ஒன்று தயார் செய்திருப்பார்கள். குறைந்தது நூறு பைட்டர்களை வைத்து, அங்கும் இங்கும் பறப்பது போல் நிறைய ஷ்டண்ட் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் வைத்திருப்பார்கள்.
ஆனால், இந்த படத்தின் இயக்குனர் சாந்தகுமார் இப்படி செய்யவில்லை. இருக்கும் ஹீரோவிற்கு ஏற்ற மாதிரி ஒரு கதை தயார் செய்திருக்கிறார். படத்தில் தேவையில்லாமல் பாடலை திணிக்காமல், கதையுடன் ஓட்டி வருவது போல் சில பாடல்களை மட்டும் வைத்திருக்கிறார். அதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ்.
ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கையை கண் முன்னாடி பார்ப்பது போல் இருக்கிறது. சினிமா மாதிரி உணர்வே வராது. அவ்வளவு யதார்த்தம். வராத நடிப்பை கஷ்டப்பட்டு நடித்தால், அது திரையில் தெளிவாக காட்டிக் கொடுத்து விடும். அதனால் இந்த படத்தின் ஹீரோ அவர் பாணியில் யதார்த்தமாக நடித்திருப்பது மிகவும் இயல்பாக இருக்கிறது. படம் பார்க்கும் மக்களுக்கு இந்த படத்தின் மீது ஒரு நம்பிக்கையை உருவாக்குகிறது. படம் தொடங்கி சில நிமிடங்களில், தங்கள் டிக்கெட் காசு வீணாகவில்லை என்பதை மக்கள் உணர்வார்கள்.
ஹீரோவின் அண்ணன் காதல் திருமணம் செய்து கொண்டு சென்னையில் மனைவியுடன் தங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஹீரோவும் , அவரது அம்மாவும் சென்னை செல்லும் அவசியம் ஏற்படுகிறது. அப்போது ஹீரோ பேசும் வசனங்கள் நெஞ்சில் நிற்கும்.
1) எப்படியோ, உன்னோட வேலை நடந்திருச்சு.(கைக்குழந்தையை பார்த்துக்க ஆள் கிடைச்சாச்சு)
2) தன் தம்பியை ஒரு நாள் கூட தன் வீட்டில் தங்க வைக்காத அண்ணன். ஆனால் தன் மனைவியின் தங்கை அந்த வீட்டிலேயே தங்கி படிக்கிறார். இது தெரிய வரும் காட்சியில், ஹீரோ தன்னுடைய ஆதங்கத்தை யதார்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
3)”இவனை வச்சிக்கிட்டு நான் எப்படி நல்லா இருக்கிறது” என்று அம்மா ஹீரோயினிடம் சொல்ல, “ஏங்க இப்படி. நான் போன அப்புறம், என்னை பற்றி நிறைய சொல்லுவாங்க. பொறுமையா கேட்டுக்கொங்க” என்று ஹீரோ சொல்லும் வசனங்கள் மிகவும் யதார்த்தம்.
இது மாதிரி படத்தில் இருக்கும் அனைத்து வசனங்களும், உங்கள் வாழ்க்கையில் பேசும் வசனங்களைப் போல் யதார்த்தமாக இருக்கும்.

படத்தின் கதையைப் பற்றி இங்கு சொல்லமாட்டேன். அது சுவாராசியத்தைக் குறைத்து விடும். விறுவிறுப்பான ஒரு படம். அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு ஆவலை கூட்டிக் கொண்டே போகும்.
போலீஸ்காராக வரும் ஜான் விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். ஒரு போலீஸுக்கான மிடுக்கு அவரிடம் யதார்த்தமாக தெரிகிறது. உமாரியாஷ் கான் கற்பினி போலீஸ் வேடத்தில் பிரமாதமாக நடித்து இருக்கிறார். எவ்வளவு யதார்த்தம். நடிப்பில் அப்படி ஒரு முதிர்ச்சி தெரிகிறது. இந்த இருவருமே காமெடியில் தான் கலக்கி கொண்டு இருந்தார்கள். இவர்களுக்குள் இருக்கும் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த இயக்குனருக்கு நன்றி.
இந்த படம் முடியும் போது, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்படும். இந்த படத்தின் மூலமாக இயக்குனர் சொல்வது இது தான்.
“எந்த சூழ்நிலையிலும், தவறு செய்யக் கூடாது. ஒரு தவறு செய்தால், அதை மறைக்க பல தவறுகளை செய்ய வேண்டிஇருக்கும். அதனால் எப்போதும் பயத்துடன் வாழ வேண்டியிருக்கும். நிம்மதி என்பது காணாமல் போய்விடும்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக