Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

என்னை அழவைத்த ஒரு பெறியவர்

ஒரு நாள் மாலை என் வீட்டின் அருகே ஒரு கடைக்கு சென்று சில உணவு பொருட்களை வாங்கி விட்டு, வீட்டை நோக்கி என் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தேன். ஒரு முதியவர் கையில் தடியை வைத்துக் கொண்டு ரோட்டு ஓரமாய் நின்றுக் கொண்டு எல்லா வாகனங்களையும் நிறுத்துமாறு கையை நீட்டி கேட்டுக் கொண்டு இருந்தார். அவர் காலிலும் கட்டு போடப்பட்டு இருந்தது. பெரியவர் காசு ஏதாவது கேட்பார், தந்து விட்டு செல்லலாம் என்று வண்டியை நிறுத்தினேன்.

“தம்பி என் காலில் அடிப்பட்டு இருக்கிறது. சிறிது நேரம் நடந்த பின்னர் என் கால்கள் மிகவும் வலிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. தயவு செய்து என்னை இந்த சுரங்கபாதை முடிவில் விட்டு விடுகிறாயா தம்பி. அங்கு இருந்து நான் என் வீட்டிற்கு பொறுமையாக நடந்து சென்று விடுவேன்” என்றார்.

அவர் அங்கு இருந்து எதற்கு வீட்டிற்கு நடந்து செல்ல வேண்டும். வீட்டிலேயே விட்டு விடலாம் என்று முடிவு செய்து அவரை கேட்டேன். “உங்க வீடு எங்க இருக்கு? நான் வீட்டிலேயே விட்டு விடுகிறேன்”, என்று சொன்னேன்.

அவர் வீடு இருக்கும் இடத்தை சொல்லி விட்டு, “இந்த காலத்து பசங்க பெரியவர்களை எங்கபா மதிக்கறாங்க. ஆனால் நீ வண்டியை நிறுத்தி என் வீட்டிலேயே விட்டு விடுகிறேன் என்கிறாய். ரொம்ப நன்றி தம்பி” என்றார்.

அவர் சொன்ன இடத்தில் இறக்கி விட்டேன்.

“ரொம்ப நன்றி தம்பி. தம்பி என்ன செய்கீறிர்கள். படிக்கீறீர்களா?” என்றார்.

“இல்லங்க. படிப்பேல்லாம் எப்பவோ முடித்து விட்டேன். இரண்டரை ஆண்டு வேலை செய்தேன். அடுத்த மாதம் மேற்படிப்பிற்காக வெளியூர் செல்கிறேன்”, என்று நான் கூறினேன்

“நல்லது தம்பி. மனைவியையும் கூட்டிட்டு போறீங்களா?” என்று கேட்டார் பெரியவர்.

“எனக்கு 24 வயது தான் ஆகிறது. அதற்குள் எதற்கு திருமணம்”, என்றேன்.

“அது சரி தம்பி. படிப்பை முடித்து விட்டு, வேலை கிடைத்தவுடன் உடனே திருமணம் செய்துகொள். நான் கடவுளை வேண்டிக்கிறேன் தம்பி. உன் நல்ல மனசுக்கு நல்ல மனைவியா வருவா. நான் மனசார சொல்லுகிறேன். இது நிச்சயமா நடக்கும் தம்பி”, என்று சொல்லி விட்டு அந்த பெரியவர் அழுக ஆரம்பித்து விட்டார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் உடம்பெல்லாம் நடுங்குகிறது. நான் வண்டியில் இருந்து இறங்கி விட்டு, அவரை அவர் வீட்டின் வாசலில் உட்கார வைத்தேன்.

“எதுக்குங்க அழுகறீங்க?”, என்று நான் கேட்டேன்.

தம்பி எனக்கு இருதய கோளாறு இருக்கு. ஒவ்வொரு நிமிடமும் நரக வேதனையா இருக்கு. வலியில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட தோன்றுகிறது. ஆனால் இந்த கோழைக்கு தற்கொலை செய்ய கூட தைரியம் இல்ல தம்பி”, என்று சொல்லி விட்டு தேம்பி தேம்பி அழுதார் அவர்.

“என்னங்க. பேர குழந்தைகள் முகத்தை பார்த்து விளையாடினால் இந்த வலி எல்லாம் மறந்து போய் விடும் அல்லவா. உங்கள் பிள்ளைகள் இந்த வீட்டில் இருக்கீறார்களா?”

“எனக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். மகளை அமெரிக்காவில் ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தேன்.முதல் மகனுக்கு யார் யாருக்கோ லஞ்சம் கொடுத்து, காலில் விழுந்து ஒரு அரசாங்க வேலையை வாங்கி கொடுத்தேன். என்னுடைய அரசாங்க வேலையை ராஜினாமா செய்து விட்டு, அந்த வேலையை என் இரண்டாம் மகனுக்கு வாங்கி கொடுத்தேன். என் மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்னரே இறந்து விட்டாள்.

என்னுடைய பிராவிடண்ட் பணம், சில நலத்தை விற்று பெற்ற பணம் ஆகியவற்றை வைத்து என் இரு மகன்களின் திருமணத்தை நல்ல படியாக செய்து முடித்தேன். திருமணம் ஆன பிறகு இருவருமே தனி குடித்தனம் சென்று விட்டார்கள். ஒருவன் அடையாரில் இருக்கிறான். ஒருவன் திருவான்மியூரில் இருக்கிறான். மாதம் ஒரு முறை குழந்தைகளுடன் வந்து என்னை பார்த்து விட்டு செல்வார்கள். இந்த தள்ளாடும் வயதில் எனக்கென்று யாருமே இல்லை தம்பி.

என் மகன்களுக்காக நான் எவ்வளவோ தியாகங்களை செய்தேன். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள். பணம் அவர் கண்களை மறைத்து விட்டது. அவர்கள் வீட்டிற்கு சென்று பேரக் குழந்தைகளைப் பார்க்க என் உடல் ஒத்துழைக்கவில்லை. போன் செய்தால், பிள்ளைகள் படிக்கிறார்கள், தொந்திரவு செய்யாதீர்கள் என்று சொல்லுகிறார்கள். இதையெல்லாம் நினைத்து நினைத்து வருந்திக் கொண்டு இருக்கின்றேன். ஒரு காலத்தில் மனைவி, பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருந்த நான், இப்போது ஒவ்வொரு நொடியிலும் தனிமையால் கொல்லப்பட்டு வருகிறேன்.

தம்பி, உனக்கு ஒன்று சொல்லுகிறேன். கேள். நல்லா படி. வேலைக்கு போ. நல்லா பணம் சம்பாதி. ஆனால் அது வெறும் காகிதம் தான், அது மட்டும் வாழ்க்கை இல்லை. இதை நீ மறந்திடவே கூடாது தம்பி. உனக்கு வேண்டியதை வைத்துக் கொள். மீதியை இல்லாதவர்களுக்கு கொடுத்து விடு தம்பி. புன்னியத்தை சேரு தம்பி. என் மகன்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு நான் செலவு செய்த பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து இருந்தால், இந்த தள்ளாத வயதில் நான் இப்படி கஷ்டப்படும் நிலைமை வந்திருக்குமா.

ரொம்ப நன்றி தம்பி. நல்ல படியா படித்து விட்டு வா. உன்னை இந்த நிலைமைக்கு உயர்த்திய உன் பெற்றோர்களுக்கு என்றும் நன்றி கடன் பட்டவனாய் இரு. போய்ட்டு வா தம்பி”, என்றார் பெரியவர்.

”கடவுளை நம்பிக்கையுடன் கும்பிடுங்கள். உங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் விரைவில் ஏற்படும்”, என்று பெரியவருக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினேன்.

என் கண்கள் கலங்கி விட்டது. கடவுள் இந்த பெரியவர் வடிவில் வந்து என்னிடம் இதை கூறியதாகவே நான் கருதினேன்.

என் மனதில் ஒரு திருப்தி ஏற்பட்டது. ஒரு பெரியவருக்கு உதவினேன் என்ற திருப்தி. ஒரு சிறிய உதவி செய்ததற்கே இவ்வளவு சந்தோஷம் ஏற்படுகிறதே. இனிமேல் என்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தேன்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages